வழக்கம்போல ஆட்டத்தில் பின்னிப் பெடல் எடுக்கிற விஜய், நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டுமே? 'வேட்டைக்கார'னில் கை வீசி நடந்தவர், இதில் கையைப் பின்னால் கட்டிக்கொள்கிறார். மற்றபடி 'மேல கை வைக்கிறதுக்கு முன்னாடி ஒரு தடவைக்கு நூறு தடவை யோசிக்கணும். கை வெச்சுட்டா, அப்புறம் யோசிக்கவே முடியாது' என்று தன் புகழ் பாடுகிறார். 'எனக்குப் பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு. ஒவ்வொருத்தரும் சிங்கக் குட்டிங்க' என்று ரசிகர் புகழ் பாடுகிறார். திடீரென்று தமிழர்களுக்காகக் கவலைப்படுகிறார். நல்லவர்களுக்கு உதவுகிறார். சினிமா டு கோட்டைக்கு 'இதுதான் ரூட்' என்று சொல்லிவிட்டார்கள்போல.குப்பத்து
விஜய் கடலில் காணாமல் போகும்போதும், தீயில் மாட்டிக்கொள்ளும்போதும் குப்பத்து மக்கள் எப்படித் துடிதுடிக்க வேண்டும்? ரொம்பச் சாதாரணமாக 'சுறா போயிட்டான்' என்று அடுத்த வேலையைப் பார்க்க ஆரம்பித்துவிடுகிறார்கள். குப்பத்துக்கு வீடு கட்ட நூற்றுச் சொச்சம் கடத்தல் லேப்-டாப்களை விற்று, 100 கோடி சம்பாதிக்கிறார் விஜய் (எங்கேயோ போயிட்டீங்க பாஸ்!). குப்பத்து மக்கள் நடுத் தெருவில் நிற்கும்போது, ஆடி காரில் வலம் வருகிறார். ஜிகுஜிகு கோட், டை கட்டி ஆடுகிறார். வீடு கட்டுகிற வழியைத்தான் காணோம். இருக்கிற இம்சைகள் போதாது என்று 'எப்பவும் வெடிக்க ரெடியா இருக்குற எரிமலை மாதிரியே இருக்குறான்', 'சுனாமி வருது... சூறாவளி வருது... ரெண்டும் சேர்ந்து வருது' இப்படிப் படம் முழுக்க ஜால்ரா அடித்து ஜவ்வு கிழிக்கிறார்கள். மணிசர்மாவின் இசையில் தெலுங்கு இறக்குமதியாக இருந்தாலும் சில பாடல்கள் மனதுக்குள் ரவுண்டு கட்டுகிறது. ஆக்ஷனில் தீப் பிடிக்கும் ஏகாம்பரத்தின் கேமரா, காதல் காட்சிகளில் கவிதை வாசிக்கிறது.
சுறா, மனிதர்களைத் தாக்கும் என்பது விதி!
-விகடன் விமர்சனக் குழு

